ஏழு வயதினிலே....!
ஏழுவயது
எல்லோரும்
கடந்து வந்திருப்போம்...
எத்தனை இன்பங்கள்
கண்டு வந்திருப்போம்....
அண்ணன்தம்பி எங்களோட
அயல்வீட்டு கூட்டாளி
அம்மாவின் சோட்டிதான்
அப்போஎனக்கு போர்வை...
பனையோலை விசிறி
போக்கிடும் வியர்வை....
காலுக்குமேல் கால்போட்டு
கவலையில்லாத தூக்கம்.....
காலையில் அஞ்சு மணி
அப்பா அரட்டி விடுவார்
அடித்து பிடித்து மூஞ்சி கழுவி
சிட்டாய் பறப்போம் பூவாய...
நாவற்பழம் என்றெண்ணி
ஆட்டுப்புழுக்கை பொறுக்குவதும்
பனம்பழம் பொறுக்கப்போய்
பேயென்று ஓடுவதும் வழக்கம்..
அம்மா கரைத்த சோற்றை
வயிறுமுட்ட சாப்பிடுவோம்
தலைக்கு எண்ணெய் வைக்க
எனும் சத்தம் கேட்டால்
தலைதெறிக்க ஓடிடுவோம்...
பள்ளிக்கு ஒழுங்கா செல்வோம்
பாடமும் எதோ கொஞ்சம் படிப்போம்
விடுமுறை நாளென்று வந்தால்
வீட்டையே ரெண்டா புளப்போம்...
கள்ளன் போலிஸ் கபடி கபடி
கிட்டிபோல் கிரிக்கெட்
இதிலே கிடையாய் கிடப்போம்..
தாகம் எடுத்தால் பொறுக்கிய
குரும்பையில் ஓட்டைபோட்டு
இளநிர் கொஞ்சம் குடிப்போம்...
ஒருமிக்க நின்று உச்சாபோய்
போகும் தூரம் அளப்போம்...
சுருக்கில் பிடித்த ஓணானை
நாய்க்குட்டியாய் வளர்ப்போம்...
வயற்காட்டில் கதிர்திருடி
அவல் செய்வோம் அதை
ஆலமர பிள்ளையாருக்கு
ஆவலாய் படைத்திடுவோம்...
வைக்கோலில் மேத்தைசெய்து
வெண்ணிலவை ரசித்திருப்போம்..
காகிதத்தில் கமரா செய்து
விண்மீனை படம்பிடிப்போம்...
மாமரத்து ஊஞ்சலில் நாங்கள் ஆட
மாம்பூ கொத்தும் கிளி பாட்டுப்பாட
மரம்கொத்தி வந்துநின்று தாளம்போட
வரம்வேண்டி வந்தாற்போல் வாழ்ந்து வந்தோம்....
வயதொன்று கூடக்கூட ஒவ்வொன்றாய்
இழந்துவந்தோம்....
எத்தனையோ வயது நாம்
தாண்டி வந்திருந்தும்
ஆறேழு வயதில் அனுபவித்த சுகம்போல
நாட்கள் இன்று மலர்ந்திடுமா...?
மீண்டும் அந்தசுகம் கிடைத்திடுமா...?
"பிடித்திருந்தால் மறக்காம ஓட்டுப்போடுங்க"
நன்ட்புடன்,
நா.நிரோஷ்.
Comments
Post a Comment