நான் ரசித்த அந்திமாலை.....!

நான் ரசித்த அந்திமாலை....!

வெள்ளை நிலவை
வேலைக்கு அமர்த்திவிட்டு
வீடுசெல்லும் மஞ்சள் சூரியன்...!

மாலைநேர குளிர்காற்றில்
மயங்கியபடி ஒன்றை ஒன்று
முத்தமிட முனைகின்ற தென்னோலைகள்...!
உதிர்ந்து விழுகின்ற நொச்சிலைகள்...!
முதிர்ந்து விழுகின்ற வேப்பிலைகள்....!

வீடு திரும்பும் விவசாயி
காடுதிரும்பும் பறவைகள்...!
கூடுதேடும் கோழிகள்
கூடவே நடக்கும் ஆடுகள்...!

அலையில் நீல பூக்கள்சூடி
அசைந்துவரும் ஆற்றுவாழைகள்...!
அதனடியில் படுத்துறங்கும் மீன்கள்...!
அதைபிடிக்க பதுங்கி நிற்கும் மீனவர்கள்...!

கோயில்மணி ஓசையுடன்
குருகுல குழந்தைகளின் தேவாரசத்தம்....!
கொக்கு நாரை தவளைகளின்
குதூகல சத்தம்....!

குளக்கரையில் கச்சைகட்டி
குளிக்கபோகும் ஆண்கள்...!
குடத்தை இடுப்பில் வைத்து
நடந்துபோகும் பெண்கள்...!

குழந்தைக்கு சோறூட்டும் அம்மா
பசுவிற்கு புல்லூட்டும் அப்பா...!
பேரனுக்கு கதை சொல்லும் பாட்டி
பிரம்பில் கூடைநெய்யும் தாத்தா...!

அரசியல்பேசும் சண்முகம்
அதைமறுக்கும் சுந்தரம்...!
தேநீர்கடையில் பெரும்கூட்டம்
பின்புறத்தில் புகைமூட்டம்...!

பெட்டிக்கடை முன்னாடி
சில்லறை தொலைத்த சிறுமி...!
சீனிமிட்டாய் கேட்டு
சிணுங்குகின்ற சிறுவன்...!

மணல்வீதியில் புதைந்திருக்கும்
வைக்கோல்சுமந்த மாட்டுவண்டி...!
கல்வீதியில் கறகறக்கும்
பனையோலை தள்ளுவண்டி...!

எண்ணெய் விளக்கில்
எரிந்துவிழும் வண்டுகள்....!
வாசனை தீர்ந்தபின்
வாடிவிழும் பூச்செண்டுகள்....!

பேய் பேய் என்று
கத்திய பார்வதி...!
ஆ... ஊ... என்று
அதை விரட்டும் பூசாரி...!

அத்தனையும் கண்முன்னே
வந்து வந்து போகிறதே....!
இத்தனைக்கும் நானில்லை
நான்பிறந்த ஊரினிலே...!
எத்தனை மாலை வந்தாலும்.
எங்கே அந்த.... நான் ரசித்த
அந்தி மாலை....????



நா.நிரோஷ்.

Comments

  1. ஏனோ
    பெட்டிக்கடை முன்னாடி
    சில்லறை தொலைத்த சிறுமி...!

    இன்னும் கண்ணுக்குள் காட்சியாய்!!!

    ReplyDelete
  2. நன்றி நண்பா.....!!!

    ReplyDelete
  3. நிரோஷ்! மிக அருமையாக உள்ளது அந்திமாலை...யாருக்குமே பிடிக்கும் அந்தி மாலை...ஏழுதிய விதமும் சிறப்பு. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஒவ்வொரு வரிகளும் கண்ணில் காட்சியாக ஓடுகிறது... கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?