சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?



தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும், கல்வெட்டுச் செய்திகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. கி.பி.18 - ஆம் நூற்றாண்டில் உரைநடை புத்துயிர் பெற்றது. அதன் பின்னர்தான் நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள் தோன்றின.

மேலை நாடுகளின் போக்கை ஒட்டி உரைநடையை முதன்முதலாகப் படைப்பிலக்கியத்திற்குப் பயன்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். இவருடைய பரமார்த்த குரு கதையே தமிழ் உரைநடையில் உருவான முதல் கதையாகும். இதனைத் தொடர்ந்தே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன. இன்று, சிறுகதையைப் படைக்கும் படைப்பாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சிறுகதையைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது. இது, சிறுகதைப் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இப்பாடத்தில் படைப்பிலக்கியமும் சிறுகதையும் எனும் தலைப்பில், அவை பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

படைப்பிலக்கியமும் சிறுகதையும்

செய்யுளும், சிறுகதையும் படைப்பிலக்கியங்களாக விளங்கிய போதிலும், இவற்றை ஒன்றெனக் கூறிவிட முடியாது. இரண்டிற்குமிடையே வேறுபாடுகள் உண்டு. இவ் இரண்டும் வெவ்வேறு காலத்தின் இலக்கிய வடிவங்கள். ஒன்று செய்யுளால் ஆக்கப்பட்டது. மற்றொன்று உரைநடையால் ஆக்கப்படுவது. செய்யுளிலக்கியம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ளாத காலத்தில் உருவானது. சிறுகதை இலக்கியம் உலகத்தின் பிறமொழித் தொடர்பால் கிடைக்கப் பெற்றது. மன்னராட்சிக் காலத்தின் இலக்கியம் செய்யுள், மக்கள் ஆட்சிக் காலம் தந்த இலக்கியம் சிறுகதை. நாம் இன்று கூறும் சிறுகதை அமைப்பு, சங்கச் செய்யுள்களில் இல்லை. எனினும் சிறுகதைக்கான அடிப்படை, உத்தி ஆகிய இரண்டும் சங்க இலக்கியத்தில் காணப்படுவது உண்மை.

எடுத்துக்காட்டு

அகநானூறு, புறநானூறு, கலித்தொகை போன்ற செய்யுள்களில் காணப்படும் நிகழ்வுகள் அழகிய சிறுகதைகளை நினைவூட்டுகின்றன. இப்பாடல்களில் நேரடியான நீதி போதனைகள் இடம்பெறவில்லை. எனினும் வாழ்க்கையின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான கதைக் காட்சிகள் உண்டு.

சிறுகதை

இன்றைய படைப்பிலக்கியங்களின் கதைக்கரு மனித வாழ்விலிருந்தே உருவாகிறது. இவ்வகையில் மனிதர்களின் அனுபவங்களும், எண்ணங்களும் சிறப்பாக - சுதந்திரமாக - வெளிப்படும் பொழுது படைப்பிலக்கியங்கள் தோன்றுகின்றன. இவ்விலக்கியங்கள் நாவல், சிறுகதை, நாடகம், கவிதை என்று பல்வேறு வடிவங்களைக் கொண்டு விரிவு பெறுகின்றன. இவற்றுள் சிறுகதை மனித வாழ்க்கையோடு மிக நெருங்கி இருக்கும் இலக்கிய வகையாகிறது.

சிறுகதைப் படைப்பிலக்கியம்
எந்த வகைப் படைப்பிலக்கியத்திற்கும், ஆர்வத்திற்கும் மேலாக மூன்று அடிப்படைகள் தேவைப்படுகின்றன.

1) வாழ்க்கை அனுபவம்
2) வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஆர்வம்
3) கற்பனைத் திறன்

ஆகியனவாம். இத்தன்மையிலேயே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் தோன்றியுள்ளன.

சிறுகதை, உரைநடைப் படைப்பிலக்கியத்திற்கு உரியது. 20-ஆம் நூற்றாண்டின் புதுமைகளாக இவை உருவாகியுள்ளன. நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கற்பனைகள் சிறுகதைகளாக மலர்கின்றன. இக்காலப் படைப்பிலக்கியங்களுள் சிறந்ததாகச் சிறுகதை இலக்கியம் கருதப்படுகிறது. உயிராக உணர்ச்சியும், உருவமாக மொழியும் அமைந்து சிறுகதை வாழ்வு பெற்றுள்ளது. மக்களை இன்புறுத்தும் வகையிலும், அறிவுறுத்தும் வகையிலும் சிறுகதைகள் தோன்றியுள்ளன.

சிறுகதைப் படைப்பிலக்கியங்களின் மூலம் வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. மதங்கள் வளர்ந்திருக்கின்றன. மனிதப் பண்புகள் மெருகேறி இருக்கின்றன. இதைப் பற்றி இப்பகுதியில் காண்போம்.

எ.கா :

1. காந்தியடிகள் அரிச்சந்திரன் கதை மீது ஈடுபாடு கொண்டு உண்மை பேசுபவராக விளங்கினார்.

2. வீரக்கதைகளைக் கேட்டு சிவாஜி தீரனாகத் திகழ்ந்தார்.

பொதுவாகச் சிறுகதைகள் ஒரு படிப்பினையை அடிப்படையாகக் கொண்டு உயர்ந்த குறிக்கோள்களை வலியுறுத்துகின்றன. மேலும் சிறுகதைகள் பிற படைப்பிலக்கியங்களைப் போலவே உயிர்த்துடிப்புடையனவாய் விளங்குகின்றன.

படைப்பு என்பது இயற்கையின் முன் ஒரு கண்ணாடியைத் தூக்கிப் பிடிப்பதுபோல் அமைவதாகும். கண்ணாடியில் தெரிவன உண்மையான பொருள்கள் அல்ல. அவை போலிகளும் அல்ல. உண்மையை ஒத்த பிம்பங்கள். சிறுகதைப் படைப்பிலக்கியம் இத்தகைய வடிவினையே பெற்றுள்ளது. உண்மை நிகழ்வுகள், அனுபவங்களைக் கொண்டமைவதால் சிறுகதை படைப்பிலக்கிய வகைக்குப் பொருத்தமுடையதாகிறது.

1.1.1 படைப்பிலக்கியம்

அறிவின் வாயிலாக உலகத்தை அறிவதைவிட, புலன்களின் வாயிலாக உலகத்தைக் காண முயற்சி செய்தல் வேண்டும். இத்தகைய படைப்பாளரின் உணர்ச்சியே படைப்பிலக்கியத் தோற்றத்திற்கு அடிப்படையாகிறது. ஓர் அழகான காட்சியைக் காணும் அனைவரும் அக்காட்சிக்கு உணர்ச்சி வடிவம் தருவதில்லை. பெரும்பாலோர் அதை மறந்து விடுகின்றனர். கலையுள்ளம் படைத்தவர்கள் மட்டுமே அந்த அழகுணர்ச்சியை மனத்தில் பதித்து, அதற்குக் கலை வடிவம் தந்து அழியாமல் காக்கின்றனர். அழகுணர்ச்சியும், நுண்ணுணர்ச்சியும் மிக்க மனிதனின் உணர்ச்சி வெளிப்பாடே படைப்பிலக்கியத்திற்குக் காரணமாகிறது. படைப்பிலக்கியங்கள் எழக் காரணங்களாவன :

1) மனிதன் தன் அனுபவத்தைத் தானே வெளியிட வேண்டும் என்ற விருப்பம்.

2) பிற மக்களுடன் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு.

3) மனிதன், உண்மை மற்றும் கற்பனை உலகோடு கொண்டிருக்கும் ஈடுபாடு.

4) தன் அனுபவத்திற்குக் கலைவடிவம் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம்.

இனி, படைப்பிலக்கியத்தின் தன்மைகளைக் காண்போம்.

சொற்களால் திறம்பட அமைவதே படைப்பிலக்கியம். படைப்பிலக்கியம் தனி ஆற்றல் பெற்றவர்களால் உருவாக்கப்படுகிறது. படைப்பாளன் தன் உள்ளத்தில், உணர்வுகளுடன் பதிந்தவற்றை மட்டுமே படைத்துக் காட்டுகிறான். எந்த ஒரு படைப்பும் பொதுமக்களால் ஏற்கப்பட்டு, அறிஞர்களின் ஆதரவு பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். அவ்வகையில் படைப்பிலக்கியங்கள் உண்மை நிகழ்வுகளைக் கொண்டு விளங்குகின்றன. படைப்பிலக்கியம் மனிதர்களின் உள்ளத்தை ஆள்கிறது. மனித மனம் பண்பட உதவுகிறது. ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலியவற்றைப் பண்படுத்துவன படைப்பிலக்கியங்களே. இங்ஙனம் படைப்பிலக்கியங்கள் மனித வாழ்விற்குத் துணை நிற்பதை அறியலாம்.

1.1.2 சிறுகதை இலக்கியம்

இந்தியாவில் ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி, அறிவியல் புரட்சி, தேசிய எழுச்சி ஆகியன உரைநடை இலக்கியத்தை வளர்ப்பதற்கான காரணிகள் ஆயின. இந்திய மொழிகளிலும் மரபுக் கவிதைகள் படிப்படியாய்க் குறைந்து, புதிய கவிதைகள் தோன்றின. அவ்வாறே கதைகளிலும் மரபுநிலை மாறி, புதுமை இடம்பெறத் தொடங்கியது. இதன் விளைவு சிறுகதை இலக்கியம் சிறந்த இலக்கிய வடிவமாய் மலர ஆரம்பித்தது. சிறுகதை ஐரோப்பியர் வரவால் தமிழுக்குக் கிடைத்தது என்பது அறியத்தக்கது.

சிறுகதை, மக்களின் கதைகேட்கும் ஆர்வத்தால் பொழுது போக்கிற்கு இடமளிக்கும் அளவில் தோன்றியதாகும். இன்று, இச்சிறுகதைகள் சமுதாயத்தில் பலரும் விரும்பிப் படித்துப் பயன்கொள்ளத்தக்க அளவில் எளிய இலக்கியங்களாய்த் திகழ்கின்றன. சிறுகதைகள் வாழ்க்கைக்குத் திருப்பங்களாக அமைகின்றன.சிறந்த சிறுகதைகள் போதனை செய்து ஒழுக்கத்தினை உயர்த்துவதாகவும் அமைகின்றன.

அமைப்பு
கற்பனை ஆற்றல், சொல் நயம், நடை அமைப்பு மிக்க படைப்பாளரின் படைப்பே சிறுகதையின் தோற்றத்திற்கு அடிப்படையாகிறது. அளவிற் சிறியதாய் அமைந்து, ஆற்றல் மிக்கதோர் இலக்கிய வடிவமாய்ச் சிறுகதைகள் திகழ்கின்றன. சிறுகதை இலக்கியத்தினை மிகச் சிரமமான வெளியீடு என்று கூறுவது பொருந்தும். ஏனெனில், சொல்கின்ற கருத்தில் தெளிவும், வெளியீட்டில் சிக்கனமும், தெளிவான ஓட்டமும், தொய்வில்லாத ஈர்ப்பும் இதற்கு அவசியம். ஐந்நூறு பக்கங்களில் எழுதப் பட்டிருக்கும் நாவலை விட ஐந்து பக்கச் சிறுகதையின் வேகம் மிகுதியானதாகும்.

சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் சிறுகதை செதுக்கப்பட வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய்த் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். இதன் மூலமே சிறுகதையின் கலையம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.

இங்ஙனம் சிறுகதைகள் படைப்பிலக்கிய வகையுள் ஒன்றாய் விளங்குவதை அறியலாம். சிறுகதைப் படைப்பாளர்கள் தங்கள் உள்ளத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, புறவாழ்க்கையில் தாம் காணும் காட்சிகளை, அனுபவங்களைக் கொண்டு சிறுகதைகளைப் புதியதாகப் படைக்கின்றனர். இப்படைப்புகள் மனித சமூகத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் அமைதல் வேண்டும். சிறுகதைகள் மூலம் படைப்பாளரின் கற்பனை, மனநிலை, ஆளுமை ஆகியவை வெளிப்பட வேண்டும். இவ் அளவிலேயே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் சிறப்புப் பெற இயலும்.

1.2 சிறுகதை இலக்கணம்

வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு.

சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ, பண்போ கிடையாது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சிறுகதைக்கு, பண்போ தனி இலக்கணமோ இல்லை என்று கூறிவிட முடியாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறுகதையின் பொதுவான தன்மைகள் குறித்து ஆய்வுக் கருத்துகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் சிறுகதைக்கெனச் சில வரைமுறைகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர்.

இலக்கணம்

1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும்.

2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.

3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.

4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.

5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.

6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.

8) சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும்.

9) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.

10) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது.

ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி - இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.

குறிஞ்சிக் கலியில் (51) கபிலர் பாடிய கள்வன் மகன் என்ற செய்யுள் கருத்தை இங்கு எடுத்துக் கொள்வோம். தாகத்திற்கு நீர் பருக வரும் வழிப்போக்கன் போல, தலைவன், தலைவி வீட்டிற்கு வருகிறான். தாகத்தைத் தணிக்க, நீர் ஊற்றும்போது தலைவன் அவள் கையைப் பற்றுகிறான். தலைவி கூச்சலிடுகின்றாள். இதைக் கேட்ட தாய் பதறி ஓடிவருவதைக் கண்டு, தலைவனைக் காட்டிக் கொடுக்காமல் ‘அவனுக்கு விக்கிக் கொண்டு விட்டது’ என்று தலைவி ஒரு பொய்யைக் கூறுகிறாள். கள்வன் மகன் என்று அவனை அன்பு பொங்க ஏசுகிறாள்.

இவ்வளவும் ஒரே நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. குறிப்பிட்ட ஒரே இடம். மூன்றே பாத்திரங்கள். ஒரே உணர்ச்சி. சின்னஞ் சிறு நிகழ்வுகள் மூலம் விரியும் கதை. எவ்வளவு சொற்செட்டு!, எவ்வளவு உயிராற்றல்! அந்தச் செய்யுள் எந்த நீதியையும் புகட்டவில்லை. ஆனால் இயற்கையான உணர்ச்சிக்கும், பெண்மையின் பண்புக்கும் இடையேயான போராட்டத்தைச் சித்திரித்து வெற்றி கண்டுள்ளது. படைப்பாளரின் இத்திறன் இலக்கணத்தை விட முக்கியமானதாகவே கருத இடமளிக்கிறது.

1.2.1 சிறுகதையின் தொடக்கம்

சிறுகதையின் தொடக்கம் குதிரைப் பந்தயம் போன்று விறுவிறுப்பாய் அமைதல் வேண்டும். சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான தொடக்கம் இன்றியமையாததாகிறது. அப்பொழுது தான் அதன் தொடர்ச்சி நெகிழ்ச்சியின்றி அமையும். படிப்போரின் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும். சிறுகதையின் தொடக்கம் வாசகர்களை ஈர்த்து, படிக்கத் தூண்டுவதாய் இருத்தல் வேண்டும். சிறுகதையில் ஒவ்வொரு வரியும் முக்கியம். அதில் அநாவசியத்திற்கு இடமில்லை என்பதிலிருந்து தொடக்கம் சிறப்பாக அமைய
வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.

சிறுகதையைத் தொடங்கி எழுதுவது என்பது யானை உருவத்தைச் செதுக்குவதற்கு ஒப்பாகும். தேக்கு மரத்துண்டில் யானையைச் செதுக்க விரும்புகின்றவன், முதலில் யானையின் உருவத்தை மனத்தில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு செதுக்கலையும் யானையின் உருவத்தை நோக்கிச் செலுத்த வேண்டும். அவ்வாறு இன்றி, சிலையைச் செதுக்குபவன் நடுவில் ஒரு குதிரையை மனத்தில் நினைத்தான் என்றால் சிலையானது யானையின் முகமும், குதிரையின் உடலுமாய் மாறி அமைந்துவிடவும் கூடும். அதாவது யாதிரை அல்லது குனை ஆக உருவாகிவிடக் கூடும். இவ்வளவிலே சிறுகதையின் தொடக்கமும் சிறப்பாக அமையப்பெறவில்லை, எனில் அதன் தொடர்நிகழ்வுகளை ஒருமுகப்படுத்தல் என்பதும் இயலாமல் போய்விடும்.

மேற்கண்ட அளவில் சிறுகதைத் தொடக்கத்தின் முக்கியத்துவம் அறியப்படுகிறது.

1.2.2 சிறுகதையின் முடிவு

சிறுகதையின் தொடக்கத்தைப் போன்றே முடிவும் முக்கியத்துவம் பெறல் வேண்டும். சிறுகதையின் முடிவு இறுதிவரை படிப்போரின் கவனத்தைக் கவரக் கூடியதாய் இருக்க வேண்டும். சிறுகதையில் முடிவு கூறப்படவில்லை எனில் அது மனத்தில் நிலைத்து நிற்காது. கதையின் முடிவு உரைக்கப்படல் அல்லது சிந்திக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலமே படைப்பாளரின் ஆற்றல் உணரப்படும். ஆகவே சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான முடிவு அவசியம் என்பது உணரப்படுகிறது.

சிறுகதையின் முடிவு நன்மையானதாகவும் அன்றித் தீமையானதாகவும் அமையலாம். சில வேளைகளில் கதையின் முடிவு முரண்பாடானதாகவும் அமைவது உண்டு. முரண்பாடான முடிவுகள் படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதும் உண்டு. சிறந்த முடிவினைக் கொண்ட சிறுகதையே மனத்தில் நிலைக்கும். சிறுகதையின் சிறந்த முடிவு சமூகப்பயன் விளைவிக்கக் கூடியது. சிலவேளைகளில் சிறுகதைகளின் முடிவுகள் தலைப்புகளாய் அமைந்த நிலையில் அவை சிறப்புப் பெறுவதும் உண்டு. இத்தகைய சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கிய உடனேயே அந்தக் கதையின் போக்கையும், அதன் முடிவையும் அறிந்து கொள்ள இயலும்.

முடிவுகளைத் தலைப்புகளாகக் கொண்ட சிறுகதைகள் சிலவற்றின் பெயர்களை இங்குக் காணலாம். நா.பார்த்தசாரதியின் ஊமைப் பேச்சு, ஜெயகாந்தனின் வேலை கொடுத்தவன், புதுமைப்பித்தனின் திண்ணைப் பேர்வழி, சோமுவின் மங்களம் போன்ற கதைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

1.2.3 சிறுகதையின் உச்சநிலை

உச்சநிலை என்பது, வாசகர்கள் எதிர்பாராத வகையில் அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் கதையை முடித்தலாகும். சிறுகதைகளில் உச்சநிலைக்கு இடமில்லை எனில் அது சாதாரணக் கதையாகவே கருத இடமளிக்கும். படைப்பிலக்கிய நிலைக்குத் தகுதியுடையதாகாது. உச்சநிலையே படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாயுள்ளது. படைப்பாளரின் மறைமுகக் கருத்துகள் சில வேளைகளில் உச்ச நிலைக்கு இடமளிப்பதும் உண்டு.

சிறுகதைகள், படிப்பவரிடத்தே அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, அதன்பின் உச்சநிலைக்கு உரியதாகிப் பயன் விளைவிக்கவேண்டும். உச்சநிலையை எதிர்பார்த்துப் படிக்குமளவில்தான் சிறுகதை அமைப்புத் தொய்வின்றி அமையும். சிறுகதையின் உச்சநிலை முடிவினையும், பயனையும் வழங்க வல்லதாய் அமைகிறது. கதை நிகழ்ச்சி, கதைமாந்தர் மூலமாகவே உச்சநிலை உயிர் பெறுகிறது. படைப்பாளர் உச்சநிலையினை அமைத்துக் கொடுப்பதன் மூலமே சிறுகதையின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும்.

கல்கி அவர்களின் கேதாரியின் தாயார் சிறுகதையில் உச்சநிலை சிறப்பிடம் பெறுகிறது. இச்சிறுகதையின் கதைத்தலைவன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடித்து முக்காடு இடும் பிராமணச் சமூக வழக்கத்தை முற்றிலும் வெறுப்பவனாக, அதை மாற்ற முயல்பவனாகக் காட்டப்படுகிறான். மேலும் அவன் அம்மாவுக்கு நேர்ந்த அந்நிலையை எண்ணி எண்ணி வருந்தி உயிரை விடுபவனாகவும் காட்டப்படுகிறான். கதை முழுவதிலும் இத்தகைய அவனது மனநிலையையே விவரிக்கும் படைப்பாளர், அவன் இறந்த பிறகு அவன் மனைவிக்கும் அதே நிலை ஏற்படுவதை உச்சக்கட்டமாக அமைத்து மனத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகிறார்.

1.2.4 சிறுகதையின் அமைப்பு

சிறுகதை விறுவிறுப்பாய்த் தொடங்கி, அதன் தொடர்ச்சியில் நெகிழ்ச்சி இல்லாமல் இயங்கி, உச்சநிலைக்குச் சென்று முடிவுவரை படிப்பவரின் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். படிப்பவர்களைச் சோர்வடையச் செய்யக் கூடாது. கதை உணர்ச்சியோட்டம் உடையதாய் அமைதல் வேண்டும்.
கதையமைப்பானது சங்கிலித்தொடர் போன்று கதைமாந்தர்களிடையே பின்னிப் பிணைந்து காணப்பட வேண்டும். கதையின் கருப்பொருள் எளிமையானதாய் இருக்க வேண்டும்.

சிறுகதை மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைதல் வேண்டும். சமுதாயத் தேவையை நிறைவு செய்யும் பாங்கிலும் அமைதல் வேண்டும். நல்ல சிறுகதைக்கு, தொடக்கமும், முடிவும் இன்றியமையாதவையாகின்றன. சிறுகதையைப் படிக்கும் போது அடுத்து என்ன நிகழும் என்ற உணர்ச்சியும், எதிர்பார்ப்பும் ஏற்படுத்தும் வண்ணம் கதையமைப்பு இருத்தல் வேண்டும். படைப்பாளன் கதையில் இன்ன உணர்ச்சிதான் இடம்பெறவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

1.4 கதைக்கரு

சிறுகதையில் மைய அம்சமே கதைக்கருதான். அது வீரியமும், உயிர்த்துடிப்பும் கொண்டதாய் இருக்கவேண்டும். ஒரு கதையின் சிறப்பிற்குக் கதைக்கருவே மூல காரணமாகிறது. கருவில் சிறப்பு இல்லையெனில் கதையிலும் சிறப்பிருக்காது. எனவே கதைக்கரு ஒரு புதிய கருத்து, ஒரு புதிய விளக்கம், ஒரு புதிய பார்வை, ஒரு புதிய அழுத்தம், ஒரு புது அம்சம் கொண்டதாயிருக்க வேண்டும். இவற்றோடு கதைக்கரு இலக்கியத் தரத்தைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.

அறம் வலியுறுத்தல்
கதைக்கரு எளிமையாக அமைதல் வேண்டும். மக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் வேண்டும். சமுதாயத் தேவைகளைச் சுட்டிக் காட்டுதல் வேண்டும். வாழ்க்கையின் நன்மையை, அறத்தினை வலியுறுத்த வேண்டும். சிறுகதைகளின் கதைக்கரு பொழுதுபோக்கு நிலையைத் தாண்டி மக்களுக்குப் பயன்படும் வகையில் அமைதல் வேண்டும். கல்கி, அகிலன், புதுமைப் பித்தன் ஆகியோருடைய சிறுகதைகளில் இத்தகைய கதைக்கரு அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

கதைக்கரு - உருவாக்கம்
படைப்பாளனின் ஊடுருவும் திறனால் கதைக்கரு உருவாக்கப்படுகிறது. கதைக்கரு வருங்காலத்தை ஊடுருவுவதாக அமைதல் வேண்டும். உணர்ச்சி, சிந்தனைகளின் அடிப்படையில் உருவாதல் வேண்டும். உண்மை, கற்பனை, நிகழ்வுகள், செய்திகள் இவற்றில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு, சமூகத்திற்கும் பயன்பட வேண்டும். கதைக்கருவில் இலட்சிய நோக்கு வெளிப்படல் வேண்டும்.

‘சிறுகதை அளவில் சிறியதாய் இருக்க வேண்டும். அந்த அளவுக்குள் ஒரு கதைக்குரிய கரு இருக்க வேண்டும். கதையும் முடிவும் கொண்டதாகக் கதைக்கரு விளங்குதல் வேண்டும்.’ இக்கருத்தையே சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் என்று புகழப்படும் மாபசான், ஆண்டன் செகாவ், ஓ ஹென்றி போன்றோர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

புதுமைப்பித்தனின் சங்குத் தேவனின் தர்மம் என்ற சிறுகதை ஆறு பக்கங்களில் அமைந்து இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. இறுதியாகக் கூறுமிடத்து, ‘கதைக்கரு, ஒரு கதைக்கு முழுவதுமாய் வரையப்பட்ட ஓவியம் போலமைந்து, கதையில் அதன் அழகு முழுவதுமாய் வெளிப்பட வேண்டும்’ என்பது அறியப்படுகிறது.

1.4.1 சமூகச் சிக்கல்கள்

சமூகச் சிக்கல்களைச் சுட்டிக் காட்டுவதே படைப்பிலக்கியங்களின் நோக்கமாகும். இந்நெறி சிறுகதை இலக்கியங்களிலும் பின்பற்றப் படுகின்றது. சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சீர்கேடுகளை விளக்கும் கதைகள் சமூகச் சிக்கல்களுக்கு உரியதாகின்றன. இத்தகைய சிறுகதைகள் சமூகச் சீர்திருத்தத்திற்கும், சமூக மறுமலர்ச்சிக்கும் வழிகாட்டுவதாய் உள்ளன. நாட்டில் வாழும் மக்கள் பொதுஅறிவு பெறுவதற்கும், பிணக்குகள், பூசல்கள் இல்லாமல் வாழ்வதற்கும் இச்சிறுகதைகள் உதவுகின்றன. சமூகச் சிக்கல்களுக்கு உரிய களங்களாகக் குடும்பம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சுட்டப்படுகின்றன. இத்தகைய சமூகச் சிக்கல்களுக்குரிய சிறுகதைகள் சிலவற்றைப் பின்வருமாறு காண்போம்.

குழந்தை மணம்
நம் சமூகத்தில் பரவிக் கிடந்த சீர்கேடுகளுள் இதுவும் ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த வழக்கம் சமூகத்தில் பரவலாகக் காணப்பட்டது. பின்னர், பல எழுத்துப் புரட்சிகளின் மூலம் இக்கொடுமை சமூகத்தை விட்டு அகன்றது. இப்புரட்சிக்கு உறுதுணையாய் நின்ற சிறுகதைகள் பலவாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

(1) வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்

(2) புதுமைப்பித்தனின் ஆண்மை

விதவைக் கொடுமை
அக்காலச் சமுதாயத்தில் கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமானதாய் இருந்தது. சமுதாயத்தில் கைம்பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்டங்களினாலும், பழக்க வழக்கங்களினாலும் அவர்கள் பெரிதும் அவதியுற்றனர். இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில் மகளிரின் நிலைமையைப் பல்வேறு கோணங்களில் சிறுகதைகள் விவரித்தன. இதன் விளைவாகச் சமூக மாற்றங்களும் நிகழ்ந்தன. விதவைக் கொடுமைகளை விளக்கும் சிறுகதைகளுக்கு, புதுமைப்பித்தனின் வழி, கி.ராஜநாராயணனின் சாவு ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.

வரதட்சணைக் கொடுமை
‘திருமணத்தின் போது வரதட்சணையை ஒரு நியதியாகக் கொள்ளும் இளைஞன் அவனது கல்வியையும், நாட்டையும், பெண்மையையும் பழிப்பவனாகின்றான்.’ என்று காந்தியடிகள் கூறியுள்ளார். வரதட்சணை என்ற பெயரில் தமிழ்ச் சமுதாயத்தில் திருமணம் என்பது தன் புனிதத் தன்மையை இழந்து கேவலமான வணிக நிலைக்கு மாறிவிட்டது. இச்சமூகக் கொடுமை படைப்பாளர் நெஞ்சில் பதிந்து சிறுகதைகளாயிற்று. இவ்வகையில் சி.சு.செல்லப்பாவின் மஞ்சள் காணி என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கது.

பொருந்தா மணம்
வயது கடந்த முதியவர் இளம் பெண்களை மணந்து கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் நிலவியது. இவ்வழக்கத்தைச் சமூகக் குற்றமாகவே கருதி, படைப்பாளர்கள் தங்கள் கதைகளில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய சிறுகதைகளுக்கு உதாரணமாக, கல்கியின் சர்மாவின் புனர் விவாகம், ஜெயகாந்தனின் பேதைப்பருவம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும் சமூகத்தில் நிலவி வந்த மூடநம்பிக்கை, சாதிக் கொடுமை, வறுமைக் கொடுமை, தீண்டாமை ஆகிய சமூகச் சிக்கல்களும் சிறுகதைகளாக வெளிவந்தன. இங்ஙனம் சிறுகதைகள் சமூக மாற்றத்திற்கு வழியேற்படுத்தித் தரும் அளவில் பணியாற்றி இருப்பதை அறியலாம்.

1.4.2 குடும்பச் சிக்கல்கள்

குடும்பப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு தோன்றும் சிறுகதைகளும் உண்டு. இத்தகைய சிறுகதைகள் மூலம் குடும்பச் சிக்கல்களுக்கான காரணங்கள் அறியப்படுகின்றன. சுயநலம், உறவுமுறைப் பிணக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, விட்டுக் கொடுக்காமை, கூடி வாழாமை, குற்றம் காணல் ஆகியவற்றால் குடும்பச் சிக்கல்கள் உண்டாவது சுட்டப்படுகின்றது.

இவ்வகைப்பட்ட சிறுகதைகள் குடும்ப வாழ்வின் இன்ப, துன்பங்களை அணுகி ஆராய்ந்து சமூகப் பயன் விளைவிக்கின்றன, குடும்ப வாழ்வின் நிறை, குறைகளை மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. வாழ்வின் நன்மை, தீமைகளைப் போதிக்கின்றன. குடும்பப் பிரச்சனைகளைக் களைவதற்கு மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகளைக் கூறுகின்றன. இதன் மூலம் தனிமனிதக் குணநலன்களை மேம்படுத்தவும் உதவுகின்றன.

குடும்ப வாழ்வின் சிக்கல்களைச் சிறுகதையில் சித்திரிப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கு.ப.ராஜகோபாலன் அவர்கள். இவரின் விடியுமா என்ற சிறுகதை எளிதில் மறக்க இயலாது. ஒரு சிறுகதையின் தொடக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திறனாய்வாளர் பலரால் எடுத்துக்காட்டப்படும் சிறப்புப் பெற்றது. லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோர்களும் குறிப்பிடத் தகுந்தவர்களாகின்றனர்.

1.4.3 தனிமனிதச் சிக்கல்கள்
தனிமனிதனின் மனப் போராட்டங்களைச் சித்திரிக்கும் சிறுகதைகள் தனிமனிதச் சிக்கலுக்கு உரியனவாகின்றன. இத்தகைய சிறுகதைகளில் நிகழ்ச்சிகளும், பாத்திரங்களும் ஒன்றோடொன்று கலப்பதில்லை. ஒரு பாத்திரம் அல்லது ஒரு சூழ்நிலையை மையமாக வைத்தே மனப் போராட்டங்கள் சித்திரிக்கப்படுகின்றன. சமூகக் கட்டுப்பாடு, சூழ்நிலை காரணமாக மனிதனுக்குள் உணர்ச்சிகள் அடைபட்டுக் கிடக்கின்றன. இவ்வுணர்ச்சிகளின் வெளிப்பாடு தனி மனிதச் சிக்கலுக்கு உரியதாகிறது. மேலும் மனிதனின் உணர்வுகளைத் தத்துவ வகையில் வெளிப்படுத்தும் கதைகளும் இவ்வகைப்பட்டனவாகவே உள்ளன.

அகிலன் - பூச்சாண்டி
க.நா. சுப்பிரமணியன் - மனோதத்துவம்
புதுமைப்பித்தன் - மனநிழல்
சூடாமணி - சுமைகள்

ஆகியவை குறிப்பிடத் தகுந்தவையாகும்.

க.நா.சுப்பிரமணியத்தின் மனோதத்துவம் கதையில் எதிர் வீட்டுக்காரன் நடு இரவில் வானொலி வைக்கிறான். இதை ஒருவன் எச்சரிக்கிறான். எச்சரித்தும் கேளாமல் போகவே அவனைக் கொன்று விடுகிறான். அதன் பிறகும் நடு இரவில் வானொலிச் சத்தம் அவனுக்குக் கேட்கிறது. எனவே மனோதத்துவ மருத்துவரிடம் செல்கிறான். இச்சிறுகதை கொலை செய்தவனின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதேபோல் தனி மனிதனின் பலவீனத்தைக் காட்டும் சிறுகதையாக நாரணதுரைக்கண்ணனின் சந்தேகம் என்ற கதை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறுகதைகளின் மூலம் தனிமனிதனின் உளச் சிக்கல்கள், உணர்ச்சிகள், பலவீனங்கள் ஆகியவற்றை அறிய முடிகிறது. இதன் மூலம் தனிமனித மேம்பாட்டிற்குச் சிறுகதைகள் துணை செய்வதும் தெளிவாகிறது.

1.5 கதைமாந்தர்

ஒரு படைப்பாளனின் கற்பனை, உணர்ச்சி, எண்ணம் ஆகிய அனைத்தும் கதைமாந்தர் மூலமாகவே வடிவம் பெறுகின்றன. கதையில் வரும் மனிதர்கள் உயிர் வாழும் மனிதர்களைக் காட்டிலும் ஆற்றல் பெற்றவர்கள்; ஆயுள் மிக்கவர்கள். இவர்கள் வாழும் மனிதர்களுக்கு வழிகாட்டிகளாய் விளங்கக் கூடியவர்கள். இலக்கியத்திறனை எடைபோடுவதற்காக மட்டுமே கதைமாந்தர்கள் உருவாக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூகத்தின் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் பொருட்டும் இவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

இராமாயணத்தில், இராமன் இலட்சியவாதியாக விளங்கும் கதைத் தலைவன். சிலப்பதிகாரத்தில் கோவலன் சராசரி மனிதனாக விளங்கும் மற்றொரு கதைத்தலைவன். இராமன் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக விளங்குகின்றான் என்றால், கோவலன் சமுதாயத்திற்கு எச்சரிக்கையாக விளங்குகின்றான். இவ்வகைப்பட்ட கதைமாந்தர்கள் காலம் கடந்தும், மொழி கடந்தும், நாட்டின் எல்லை கடந்தும் இலக்கியத்தில், சமுதாயத்தில் வாழ்கின்றனர். படைப்பாளரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்கின்றனர். இவர்களின் சிரஞ்சீவித் தன்மையே கதைமாந்தர்கள் பெறும் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகிறது.

இதுபோல் தான், சிறுகதைகளில் வாழும் கதைமாந்தர்கள் சமூகத்தைத் தொடர்பு படுத்தி மனத்தில் இடம்பெற வேண்டும். சமுதாயத்திற்குப் பாடமாக அமைய வேண்டும். சமுதாயத்தை நெறிமுறைப் படுத்த வேண்டும். கதைமாந்தர்கள் சமுதாயத்திற்கும், தனிமனிதனுக்குமான உறவை வளர்ப்பவர்களாக விளங்க வேண்டும்.

கதைமாந்தர்களின் பண்புகளின் அடிப்படையில் அமையும் சிறுகதைகள் சிறந்த சிறுகதைகளாகின்றன. இப்பகுதியின் மூலம் கதை மாந்தர்களின் முக்கியத்துவத்தை உணரலாம்.

1.5.1 தலைமை மாந்தர்

ஒரு சிறுகதை மனத்தில் தங்க வேண்டுமானால் அதில் வரும் பாத்திரம், ஒப்பற்ற பண்பைப் பெற்றிருத்தல் வேண்டும். சிறுகதையில் வரும் கதைமாந்தர்கள் பல்வேறு நாட்டினராக, பல்வேறு மொழியினராக, பல்வேறு கொள்கையுடையவராக இருக்கலாம். ஆனால் சமூகத்தின் பல்வேறு படிகளில் இருப்போருக்கும், கதைநிகழ்ச்சிக்கும் நிறைவைத் தருபவராக விளங்குதல் வேண்டும். இத்தகைய பாத்திரங்களே தலைமை மாந்தருக்கான தகுதியைப் பெறுகின்றனர்.

பண்புகள்
சிறுகதைகளில் இடம்பெறும் தலைமை மாந்தரே கதை நகர்வதற்குக் காரணமாகின்றனர். தலைமைமாந்தர் பெருமைக்குரியவர்கள். குணக்குறை பெற்றிருப்பினும் இவர்கள் பண்புநலன்களில் சிறந்து விளங்குபவர்கள். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையில் சிறுகதைத் தலைமை மாந்தர்கள் விளங்குகின்றனர்.

மேலும் சிறுகதைகளில் இடம்பெறும் தலைமை மாந்தர்கள் தங்களின் தனித்தன்மையினால் மக்கள் மனத்தில் இடம்பெற வேண்டும். இலட்சிய நோக்கு, புதுமைப் போக்குடையவராய்த் திகழ்தல் வேண்டும். வாழ்க்கையின் நன்மையை, அறத்தை, நம்பிக்கையை வலியுறுத்துபவர்களாக விளங்குதல் வேண்டும்.

தலைமை மாந்தர்கள் சமுதாயத்திற்குப் பாடம் கற்பிப்பவர்கள். சில வேளைகளில் தலைமை மாந்தர்களின் பெயரே சிறுகதைக்குத் தலைப்பாக அமைந்து சிறப்புப் பெறுவது உண்டு. எடுத்துக்காட்டாக,

ஆர்.வி
லட்சுமி
சூடாமணி
ந. பிச்சமூர்த்தி
லா.ச.ரா - பூக்காரி செங்கம்
- மேரி செல்வம்
- வீராயி
- மோகினி
- சாவித்திரி
ஆகியவற்றைக் கூறலாம். தலைமை மாந்தர்கள் சமுதாயத்தின் மாதிரிகளாக விளங்கி, மனிதப் பண்புகளுக்கு உயிரூட்டக் கூடியவர்கள் என்பதை இப்பகுதியின் மூலம் அறிகிறோம்.

1.5.2 துணை மாந்தர்

இவர்கள் தலைமை மாந்தர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்கள். கதை நகர்விற்கு இன்றியமையாத நிலையில் வேண்டப்படுபவர்கள். துணைமாந்தர்களின் துணை இன்றிக் கதையில் சிறு சிறு நிகழ்வுகள்கூட இடம்பெற இயலாது. ஒரு சிறுகதை நிறைவு பெறுவதற்குத் துணைமாந்தர்கள் அவசியம் என்பது தெரியவருகிறது. துணைமாந்தர்கள் முழுமையாகச் சித்திரிக்கப்படாத கதாபாத்திரங்களாக விளங்கிய போதிலும், கதையின் ஓட்டம் கருதிச் சிறப்பு வாய்ந்தவர்கள் ஆகின்றனர்.

கல்கியின் கேதாரியின் தாயார் சிறுகதை, நண்பனாக வரும் துணைமாந்தன் கதைகூறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துணைமாந்தர் மூலமே கதையின் உச்சநிலை உரைக்கப்படுகிறது. இக்கதையில் தலைமைமாந்தரைக் காட்டிலும் துணைமாந்தர்களின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாய் உள்ளது. இக்கதையின் நிகழ்விற்கும், தொடர்பிற்கும், முடிவிற்கும் துணைமாந்தரே துணை நிற்பதைக் காண முடிகிறது

உணர்ச்சிகள்
1) காதல்
2) வீரம்
3) சோகம்
4) நகை
5) வியப்பு
6) வெறுப்பு
7) அச்சம்
8) சாந்தம்
9) கருணை

இந்த ஒன்பது வகையான உணர்ச்சிகளுள் ஒன்றோ, பலவோ கலந்து சிறுகதைகளை உருவாக்க வேண்டும். சிறந்த சிறுகதைகள் படைப்பாளரின் மொழி, நடை, கற்பனை, வருணனை ஆகியவற்றைக் கொண்டு அமையும்.

சிறுகதைகள் அரை மணியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாயிருக்க வேண்டும். சிறுகதையின் நீளம் என்பது வரையறுக்கப்படாத ஒன்று. ஒரு பக்கத்தில் முடிந்த சிறுகதைகளும் உண்டு. அறுபது பக்கம் வரை வளர்ந்த சிறுகதைகளும் உண்டு. பொதுவாக, கதையின் கருத்துக்குப் பொருந்துகின்ற நீளம்தான் உண்மையான நீளம். இதைப் படைப்பாளர்தான் தீர்மானிக்க வேண்டும். சிறுகதைகள் எளிய நடையமைப்பில் அமைதல் வேண்டும்.


1.3 சிறுகதையில் உத்திகள்

இலக்கியத்தில் உணர்ச்சியைக் கருத்தாக மாற்ற உதவும் வடிவங்கள் அனைத்தும் உத்திகள் எனப்படுகின்றன. சிறுகதை, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் திறம்பட அமையச் சில உத்திகள் பின்பற்றப்படுகின்றன. சிறந்த உத்திகள் மூலமே சிறுகதைகள் புதுமை படைக்கின்றன. உத்திகள் படைப்பாளரின் தனித்தன்மையைக் காட்டுவதாயுள்ளன. இந்த உத்திகள் அனைத்தும் கதையமைப்பு, கதைமாந்தர்கள் மூலமே வெளிப்படுகின்றன.

சிறுகதையில் உத்திகளைக் கீழ்க்காணும் முறைகளில் வெளிப்படுத்தலாம். அவையாவன :

1) குறிப்புமொழி
2) எதுகை, மோனை பொருந்த அமைந்த சொற்றொடர் அமைப்பு
3) முந்தைய நிகழ்ச்சிகளைச் சான்று காட்டுதல்
4) சுருங்கக் கூறல்
5) கதை கூறல் முறை
6) அறிவு நிலை சார்ந்த சொற்களைப் பயன்படுத்தல்
7) நனவோடை முறை
8) சிறுகதைகளுக்குப் பெயரிடல் (தலைப்பு)
9) சிறந்த கதைமாந்தர்

சிறுகதை இலக்கியப் படைப்பு மனத்தில் நின்று நிலைப்பதற்கு அதில் இடம்பெறும் உத்திகளும் காரணமாகின்றன. உத்திகளின் மூலம் செய்திகளை எளிதாக உணரச் செய்யலாம். உத்திகள் விரிந்த சிந்தனைக்கு வழிவகுக்கின்றன. இப்பகுதியின் மூலம் படைப்பிலக்கியத்தின் ஆக்கத்திற்கு உத்திகள் துணை நிற்பதை அறியலாம்.

1.3.1 மொழிநடை

சிறுகதைகளில் மொழிநடை எளிமையாய் இருத்தல் வேண்டும். சமுதாயத்தில் உள்ள பல்வேறு நிலையினரும் படித்து, பயன் கொள்ளும் இலக்கியம் இது. எனவே எளிய மொழிநடையின் மூலம் மட்டுமே படைப்பாளர்கள் வாசகர்களின் மனத்தில் கருத்துகளைப் பதிக்க வேண்டும். தனித்தமிழ் நடை, பண்டித நடை ஆகியவை சிறுகதைக்குக் கை கொடுக்காது. அதற்காக இழிவழக்குடன் கூடிய நடையும் உதவாது. ஒரு பழகிய நடையுடன் கூடிய பேச்சு வழக்கு சிறுகதைகளில் இடம்பெறல் வேண்டும். இதன் மூலமே படைப்பாளனின் படைப்பிலக்கியம் வெற்றி பெற இயலும்.

இன்று சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதற்குக் காரணம், வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் மொழிநடையில் சிறுகதைகள் அமைந்துள்ளதே ஆகும். எனவே சிறுகதையின் மொழிநடை, உடன் இருந்து பேசுபவர்களைப் போல் அமைதல் வேண்டும். பொருள் புரியாத, கடினமான மொழிநடை கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். அனைவரும் விரும்பிப் படிக்கும் ஒரு பொதுவான நடையை உடையதாகச் சிறுகதைகள் அமைதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே உரிய மொழிநடை அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிப்பதாக இராது. எனவே அனைவருக்கும் பொதுவான ஒரு எளிய நடையே சிறுகதைப் படைப்பிலக்கியத்திற்குத் தேவையானதாகிறது.

படைப்பாளன் தனக்கென்று ஒரு மொழிநடையைப் பின்பற்றும்போது அது அவனுக்குரிய தனிநடை அழகாகிறது. இந்தத் தனி நடையழகு குறிப்பிட்ட ஆசிரியருக்கே உரியதாகி, அவருடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது.

இலக்கிய உரைநடைக்கு ஒரு வழிகாட்டிபோல் அமைந்த திரு.வி.கலியாண சுந்தரனாரின் நடை குறிப்பிடத்தக்கது.

‘கண்டிக்குச் செல்லும் வழி நெடுக இயற்கை அன்னையின் திருவோலக்கமன்றி வேறென்ன இருக்கிறது? எங்ஙணும் மலைகள், மலைத்தொடர்கள், மலைச் சூழல்கள்; எங்ஙணும் சோலைகள், சாலைகள், கொடிகள், பைங்கூழ்கள்; எங்ஙணும் அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள். இவை யாவும் ஒன்றோடொன்று கலந்து அளிக்கும் காட்சி அன்றோ கடவுள் காட்சி.’

தமிழை மக்களின் மொழியென்று உணர்ந்து கொண்டு, அதைத் தமது நடை வளத்தால் சிறக்கச் செய்தவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி.

‘ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப்போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது. எங்கே முடிவாகிறது என்று தெரிந்து கொள்ள முடியாததாயிருந்தது. தபால் சாவடியின் தூணிலே தொங்கவிடப்பட்டிருந்த தபால்பெட்டி திக்கற்ற அநாதைபோல் பரிதாபத் தோற்றமளித்தது.’

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் மொழியின் தனி நடை அழகினை அறியலாம்.

1.3.2 கூற்று

சிறுகதையின் பொருண்மையே சிறந்த கூற்று முறைக்கு அடிப்படையாகிறது. இந்தப் பொருண்மையானது செய்திகளினால் உருவாகிறது. கூற்று என்பது சிறுகதை உரைக்கும் செய்திகளைப் பற்றியதாகும். படைப்பாளர் செய்திகளைத் தாமே கூறுவது போன்றும் அமைக்கலாம் அல்லது பிறர் வாயிலாகக் கூறுவது போன்றும் அமைக்கலாம். பொதுவாக, கூற்று முறை பிறர் கூற்றாக அமையும் போதுதான் அது செய்திமுறைப் பொருத்தமும், இலக்கியச் சிறப்பும் உடையதாகிறது.

சிறுகதையில் கதைமாந்தர்கள் கூற்றுக்கு உரியவர்களாகின்றனர். சிறுகதையில் குறைந்த கதைமாந்தர்கள் இடம்பெறுவதால் அனைவருமே கூற்றுக்கு உரியவராகின்றனர். இத்தகைய கூற்றுகள் எளிய நடையில் அமைதல் வேண்டும். குறைந்த, பொருள் பொதிந்த, சுருக்கமான உரையாடல்களாக இவை அமைதல் வேண்டும்.

கூற்றுகளின் வகைகள்
1) தன் கூற்று
2) அயல் கூற்று
3) பிறர் நினைப்பதை வாங்கிக் கூறல்
4) தன் அனுபவங்களைச் செய்திகளாகக் கூறல்
5) உரைநடை வடிவிலான கூற்று
6) கடிதங்கள் வாயிலான கூற்று
7) காட்சிகளின் வழியான கூற்று
8) இயல்பான கூற்று
9) கருத்துகளின் வெளிப்பாடான கூற்று

இதன் மூலம் கூற்றுகளின் வகைகளை அறியலாம்.

1.3.3 நனவோடை முறை

நனவோடை முறை என்பது வாசகர்களைச் சுண்டியிழுக்கும் ஒரு உத்தியாகவே கருதப்படுகிறது. புதினங்களிலும், சிறுகதைகளிலும், கவிதைகளிலும் காலம், இடம் ஆகியவற்றின் பின்னணியில் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கூறாமல், உள்மனத்தின் எண்ணங்களை அலையாகக் கிளப்பிவிட்ட நிலையில் அவற்றிற்குச் சொல்வடிவம் தந்தால் அதனை நனவோடை முறை என்று கூறலாம். ‘நனவோடை’ உத்தியைப் படைப்பாளன் கையாளும்போது சொல்லாட்சி நுட்பம் உடையதாக அமையும். நனவோடை உத்தியை, ‘கவர்ச்சித் திறன் சொல்லாட்சி’ என்றும் குறிப்பிடலாம். இந்த நனவோடை முறை என்பதை, பாத்திரத்தின் நினைவுப் பாதையில் மேல் மன எண்ணத்தின் செயல்பாடாகவும், பாத்திரத்தின் அடிமன எண்ணத்தின் செயல்பாடாகவும் கொள்ளலாம். இம்முறையில் கதை மாந்தர்களின் மனம் பற்றிய பல்வேறு உண்மைகளை அறிந்து கொள்ளலாம். கதை மாந்தர்களின் நிறை, குறைகளை இம்முறையில் இனம் காண முடிகிறது. கதைமாந்தர்களின் உண்மைத் தன்மையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளவும் உதவுகிறது. சில சிறுகதைகள் முற்றிலும் நனவோடை முறையிலேயே அமைந்திருப்பதையும் காண முடிகிறது. இங்ஙனம் சிறுகதைகளில் நனவோடை உத்தி என்பது புதுமைக்கு உரியதாகச் சிறப்புப் பெறுகிறது. நனவோடை உத்தியைப் பயன்படுத்தித் தமிழில் சிறுகதை படைத்தோரில் மௌனி, லா.ச.ராமாமிர்தம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

நன்றிகள் :- முனைவர்.அ.தேவகி, கூகிள், விக்கிப்பீடியா.

நண்பர்களே இந்தபதிவு பிடித்திருந்தால் மறக்காம வாக்களித்துவிட்டு போங்கள்.

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. நிறைவான பதிவு....சிறுகதை என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு தேவையான ஒன்று ...... சிறுகதை என்பது..... ஏதோ கதை தானே.... என்று பொதுமனிதன் நினைப்பதிற்பதை தாண்டி ...நிறைய கருத்தாங்களை பொருந்தி நிற்கிறது ......வாழ்த்துகள்/......

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  4. வயிறார உண்ட திருப்தி

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு.நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.