ஆ ஊன்னா எல்லோரும் கவிதை எழுதுகின்றோம். சினிமா பார்க்கின்றோமா, காதல் செய்கின்றோமா, நண்பர்களுடன் ஊர் சுற்றுகின்றோமா, அரட்டை அடிக்கின்றோமா, சமூக இணையதளங்களில் உறுப்பினராக இருக்கின்றோமா.. அப்படியானால் நாங்களும் கவிஞர்கள்தான் என்றாகிவிட்டது இன்றைய நிலைமை. இருந்தாலும் கவிதை என்றால் என்ன.... அதன் வகைகள் என்ன... இவாறு எழுதுவது பற்றி சரியான முறையில் நாம் தெரிந்து வைத்திருப்பதும் நமது கடமையே. அந்த வகையில் இந்தப் பதிவு உங்களுக்கு கவிதை தொடர்பான ஐயப்பாட்டை நீக்கி, நீங்களும் தரமான நல்ல கவிதைகளை எழுதிட அருள்புரியட்டும் என வாழ்த்திக்கொள்கின்றேன். --------------------------------------------------------------------- கவிதை ‘இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது’ என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை. படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும். ...